...

வேளாண் குடிகளின் வரலாற்று பச்சையம்

By மகிழன் | Post Date : 2021-11-21

வேளாண் மரபின் தமிழ் அடையாளம்

உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்

ஆசிரியர் மகாராஜன்

யாப்பு வெளியீடு

           பண்பாடு என்பது மனிதனால் உருவாக்கப்பட்ட பொருள் சார்ந்த மற்றும் பொருள் சாராத குழுக்கள் ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த  தலைமுறைக்கு மாற்றியமைக்கப்பட்ட சூழல் எனப்படுகிறது.

           பண்பாட்டு முன்னேற்றம் என்பது வரலாற்று செயல்முறை ஆகும். நமது முன்னோர்கள் பலவற்றை அவர்களின்  முன்னோர்களிடமிருந்து கற்றுக் கொண்டனர். பின்னர் நாளடைவில் சொந்த அனுபவத்தில்  இருந்து சிலவற்றை சேர்த்தும் விலக்கியும் கொண்டனர்.    

     இவ்வாறாக பண்பாடு இடம் மாறி ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லப்படுவதும் எடுத்துக் கொள்ள ப்படுவதும் பண்பாட்டு மரபு எனப்படுகிறது. இந்த பண்பாட்டு மரபுத் தொடர்ச்சி ஓர் இனத்தின் வரலாறாகவும் பரிணமிக்கிறது. 

     பண்பாட்டு மரபோடு சேர்த்து இலக்கியங்கள் தொல்பொருட்கள் கல்வெட்டுக்கள் இன்ன பிறவும் ஓர் இனத்தின் வரலாறாக உருக்கொள்கிறது.

 இவ்வகையில் தமிழ் நிலத்தின் ஆதிக்குடிகளில் ஒன்றான, உழவுப் பண்பாட்டை தங்களின் பண்பாட்டு மரபாக இன்றைய தலைமுறைவரை கைமாற்றிக் கொண்டுவந்திருக்கும் உழுகுடிகள், நெல்லின் மக்கள், இலக்கிய வழக்கில் மள்ளர் எனவும் பள்ளர் எனவும் உலக வழக்கில் தேவேந்திர குல வேளாளர் எனவும் அழைக்கப்பெறும் இம்மக்களைப் பற்றிய மேற்சொன்ன   வரலாற்றின் அனைத்து உறுப்புகளோடும் பொருந்த வெளிவந்திருக்கும் இன வரைவியல் ஆய்வு நூல் தான் மகாராஜன் அவர்களின் வேளாண் மரபின் தமிழ் அடையாளம். உழவுப் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும்.

     இம்மக்களைப் பற்றிய வரலாற்று நூல்கள் பல வெளி வந்திருக்கின்றன. இவை அனைத்தும் தன்னளவில் தான் சொல்ல வந்ததை நிறைவாக சொல்லியிருக்கின்றன எனலாம். மகாராஜனின்  இந்த நூலானது எந்த வகையில் முக்கியத்துவம் பெறுகிறது என்பதை நூலின் இறுதியில் தொகுக்கப்பட்டுள்ள பார்வை நூல்கள் பட்டியலை கொண்டு அறிய முடிகிறது.

     ஐவகை திணை வாழ்வியல் முதல் நீர்த் தெய்வங்கள் ஈறாக வேளாண் மரபின் அத்தனை பண்பாடுகளையும் இம்மக்களின் நிகழ்கால சடங்குகளோடும் பழக்க வழக்கங்களோடும் தொடர்புபடுத்தி கூறியிருப்பது இந்நூலுக்கு இன்னும் வலுச்சேர்க்கிறது.

     ஐவகை நிலங்களிலும் தொழில் சார்ந்த குழுக்கள் எவ்வாறு உருவாகியது எனவும் இத்திணை  மக்களின் வேறு வேறு பெயர்களையும் சங்க இலக்கியங்களில் இருந்தும் எடுத்தாளப்பட்டுள்ளது.

     உழவர், கலமர், குடியானவர், கருங்கமளர், வெண்கமளர் போன்ற வேளாண் குடிகளின் பெயர்க்காரணங்களை பாவாணர் வழியில் சொல்லியிருப்பதோடு வேளாண்மை தொழில் சார்ந்த உழைப்புதான் இருவேறு வேளாளர்களை அடையாளப்படுத்தியிருக்கிறது என்கிறார். 

     வேளாண்மை செய்தோரில் ஒரு சிலர் வணிகர்களாக மாறினர். இச்சூழலில் உழுதுன்னும் குடும்பர்கள் உழுவித்துன்னும் கிழார்கள் எனப் பிரிந்து வேளாளர் சமூகம் பிரிந்து பெரும் வணிகர்களாக கருதப்பட்டவர்கள் கிழார்களாகவே இருந்தனர் என்ற கருத்தும் நோக்குதற்குரியதாகும்.

     உழவு நாள் குறித்தல் தொடங்கி ஏர்பூட்டல் ஏர் நடத்தல் என விரிந்து பொலி அளத்தல் விதைக்கோட்டை செய்தல் வரை நெல் வேளாண்மையின் அத்தனை படிநிலைகளையும் ஏர் எழுபது நூலில் இருந்து எடுத்துக் கூறியிருக்கிறார் ஆசிரியர். இதன் மூலம் வேளாண் குடிகளின் வரலாற்றுச் சான்றாக கம்பரின் ஏர்எழுபது என்ற நூலைப் பற்றிய  ஆய்வின் தேவையையும் இந்த நூல் தொடங்கி வைத்திருக்கிறது என்றே சொல்லலாம்

     மருத நிலத்தில் தான் அரசு தோன்றியது என்ற கருத்திற்கு மேலும் வலுச்சேர்க்கும் விதமாக ம.சோ விக்டர் அவர்களும் ஊர்க்குடும்பனே மன்னராட்சியின் தொடக்கமும் அடிப்படையுமாக இருந்தான் என்று கூறியுள்ளதன் மூலம் அறிய முடிகிறது.

     ஆரிய இந்திரன் வேறு மருதநில மழைக் கடவுள் இந்திரன் வேறு என்பதை பாவாணர் ந.சி.கந்தையா பிள்ளை போன்றவர்களின் வழி நின்றும் சங்க இலக்கியங்களின் ஆதாரங்களின் வழியும் நிறுவி மருதநில இந்திரன் வேந்தன் -  இந்திரன் மழைப் பொருண்மையின் அடையாளம் என்பதையும் கூறியிருக்கிறார்.ஆரிய இந்திரன் போர்க் கடவுள் எனவும் வெற்றி வேண்டி வணங்கப்படுபவனாகவும்  இருக்கிறான். மருதநில இந்திரன் மழை வேண்டி மட்டுமே வணங்கப்படுபவன் எனவும் வேறுபடுத்திக் காட்டியிருப்பது பல   குழப்பங்களுக்கு தீர்வாக அமைந்திருக்கிறது.

     போலவே இந்திர வழிபாடு  மருதநிலத்தை தவிர வேறு எந்த திணை யிலும் நடைபெறவில்லை என்று கூறுவதன் மூலம் மருதநில மக்களாகிய தேவேந்திர குல வேளாளர்களுக்கும் இந்திரனுக்கும் இடையே உள்ள வரலாற்றுத் தொடர்பு நிச்சயப்படுகிறது.

     இந்திரனின் வேறு பெயர் ஆயிரம் கண்ணுடையான் என்னும் புதிய வரலாற்று செய்தியை அறியத் தருகிறார் ஆசிரியர்.

     இந்திரனுக்கு ஆயிரம் கண்ணுடையான் எனும் பெயரும் வழங்கப்பப்பட்டிருக்கிறது. ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனின் உருவத்தை தான் சோழர்கள் தமது கொடியில் வரைந்திருக்கிறார்கள்.சோழர்களின் கொடியில் உள்ள புலி சின்னமானது ஆயிரம் கண்ணுடையான் எனும் இந்திரனின் உருவம் தான் என்ற செய்தியை உறுதி செய்யும் விதமாக அவரே இதற்கான தரவுகளை இராசராஜா சோழன் உலா வில் இருந்து

“.......தாவி

வரப்பு மலாய் சூல்வர ஆயிரம் கண்

பரப்பும் ஒரு வேங்கை பாரீர்” எனவும்  

கலிங்கத்துப் பரணியில் இருந்து

“புலியெனக் கொடியில் இந்திரனை வைத்த அவனும்”

என எடுத்தாண்டிருப்பது தீவிர ஆய்வுக்கு உரியதாகும். இதன் மூலம் இந்திரனுக்கு விழா எடுத்தவர்கள் சோழர்கள் தான் என்ற வரலாற்றுச் செய்தியின் பின்புலமாக இதைக் கொள்ளலாம்

     வேந்தன் வழிபாடு நாற்று நடவுத் திருவிழா பொன்னர் பூட்டும் திருவிழா நெல் வகைகள் பள்ளு வகைகள் அருவடைத் திருவிழா நீர் மேலாண்மையில் வேளாளர்களின் இருப்பான மடைக்குடும்பன் நீரானிக்கன் போன்ற தகவல்கள் கூறியது கூறலாக இருப்பதையும் காண முடிகிறது. அதே நேரத்தில் இவற்றைச் சொல்லாமல் வேளாளர்களின் வாழ்வியலை முழுமைப் படுத்த முடியாது என்பதையும்  ஏற்றுத்தான் ஆக வேண்டும்

     பண்பாட்டு தடங்களை அழிப்பதன் மூலம் அல்லது மாற்றுவதன் மூலம் ஓர் இனத்தின் வரைவியலை எவ்வாறு வரலாற்றின் பக்கங்களில் இருந்து அப்புறப்படுத்த முடியும் என்பதைச் சொல்லியிருப்பதோடு தமிழ் நாட்டு வரலாற்றில் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட தொல்குடிகளின் பண்பாட்டு மீதான தாக்கங்கள் பற்றிய அறிதலில் நமது போதாமை குறித்தும் பேசியிருப்பதில் இந்நூல் முக்கிய இடம் பெறுகிறது.

     இந்த நூலின் மற்றுமொரு சிறந்த விடயமாக நாம் பார்ப்பது இதன் உள்ளடக்க அத்தியாயங்கள்.

     வேளாண் மரபின் குளங்களும் கூட்டங்களும் – வேளாண் உற்பத்தியும் போலச் செய்தல் சடங்குகளும் – உற்பத்தி வடிவம் தெய்வங்களும் சமூக மரபுகளும் – வேந்தன் இந்திரன் மழைப் பொருண்மையின் அடையாளங்கள் – தமிழர் மரபில் இந்திர அடையாளம்  - இந்திரன் தெய்வேந்திரன் வேளாண் தொன்மங்களும் வரலாறும் – அருவடைச் சடங்கு:வேளாண் உற்பத்தியின் நிறைபேறும் போலச் செய்தலும் – வேளாண் மரபின் ஆசீவிகத்  தடங்கள் – வேளாண் மரபின் பண்பாட்டு அடையாளப் போராட்டம்

     போன்ற இந் நூலின் அத்தியாயங்கள் ஒவ்வொன்றும் நீண்ட ஆய்வையும் வாசிப்பையும் கோருவதாக இருக்கிறது. மேலும் இந்த அத்தியாயங்களை இன்னும் விரிவாக தனித்தனி ஆய்வு நூலாக எழுதுவதற்கான அனைத்து சாத்தியங்களையும் தேவையையும் இந்த நூல் முடுக்கி விட்டிருக்கிறது என்று அறுதியாகச் சொல்லலாம்.

     வேளாளர் குறித்த  கருத்து முரண்பாடுகள் உருவாகியிருக்கும் இன்றைய சூழலில் தொல்தமிழ் குடிகள் இந்நூலினை பாரபட்சமின்றி அணுகினால் தங்களின் நிலைப்பாட்டின் மீதான நியாயத்தை மறுபரிசீலனை செய்து கொள்ள இந் நூல் ஒரு நல்வாய்ப்பாக இருக்கும் என்று நம்பலாம்

     வரும் காலங்களில் வேளாண் மரபினரைப் பற்றிய ஆய்வை மேற்கொள்பவர்களுக்கு மகாராஜனின் வேளாண் மரபின் தமிழ் அடையாளம் உழவும் பண்பாடும் வேளாளர் சமூக வரைவியலும் என்ற இந்த நூலானது நிச்சயமாக ஒரு கைகாட்டி மரமாக நிற்கும்

Related Posts

...
நூல் அறிமுகம்
.....
மேலும் படிக்க
...
நூல் அறிமுகம்
.....
மேலும் படிக்க
கடந்த இதழ்கள்
பார்வையாளர்கள்

58